Sunday, September 27, 2020

பரியனை சுற்றியுள்ள மனிதர்கள் :


சாதியும் அதன் படிநிலைகளும் கட்டமைப்பும் உள்ள சமூக சூழலில்,கிராமத்திலிருந்து இருந்து கல்லூரிக்கு சட்டம் படிக்க வருகிறான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவனான பரியன். அவனை சக மனிதனாக பார்த்து ஆதரிக்கும் மனிதர்களும், அவனின் சாதியை முன்னிறுத்தி வெறுக்கும் சாதிவெறியர்களும் - இவர்களின் தாக்கமும் தான் அவன் படித்து பட்டம் பெறுகிறானா?இல்லையா? என்று தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட இருவேறு தன்மை கொண்டவர்களின் முகங்கள் :

அன்பு மட்டுமே நிறைந்த ஜோ. பரியனின் தோழி, தேவதை. தன்னை சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாதி சாக்கடையை பற்றி அறியாத ஒரு நல்ல மனசுக்காரி.

தன் சாதியில் உள்ள சக மிருகங்களுக்கு பயப்பட்டு பரியனிடம் " உன் கூட சேர்த்து என் பொண்ணையும் கொண்ணு போட்றுவானுக" என மகளின் காதலை ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மதில் மேல் பூனையாக சாதிப்பற்றுடன் வாழும் ஜோவின் தந்தை.

தன் மீதும் அரசியல் மூலமாக சாதி பின்னப்பட்டிருந்தாலும் அதை எல்லாம் பார்த்து பழகாமல் பரியனுக்கு உண்மையான நண்பனாக வரும் யோகிபாபு‌.

"அம்பேத்கர் மாதிரி ஆக வேண்டும்" என பரியன் சொன்னவுடன் அவனை கலகக்காரனுக்கு மேலே பார்க்கும் ஒரு 'வகையான' கல்லூரி முதல்வர் & அதே வார்த்தையை படித்தவுடன் பரியனை அழைத்து படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லி சமன் செய்யும் மற்றோரு 'வகையான' முதல்வர்.

கோட்டாவில் வந்ததை பொறுத்து கொள்ள முடியாமல் அதை குத்தி காட்டும் Male ஆங்கில ஆசிரியர் &" காலத்துக்கும் BABL மேல கோடு வராம பாத்துக்கோ" என கரிசனத்துடன் சொல்லும் தேவதை டீச்சர்‌. இந்த முரணானது பரியன் பிற்காலத்தில் பிரச்சனையில் ஈடுபடும்போது ஆங்கில ஆசிரியர் முதல்வரிடம் அவனை சஸ்பெண்ட் செய்ய சொல்வதும் & தேவதை டீச்சரோ "என்ன சார் நீங்களே அவனை என்ன வேணாலும் பண்ண சொல்றீங்க, சண்டை போட போறான்" என ஆதங்க படும் போதும் கூட வெளிப்படும்‌.

காலகாலமாக தொடர்ந்து ஆணவக்கொலையை ஒரு சேவை போல் செய்து கொண்டிருக்கும் சாதிதிமிர் நிறைந்த ஒரு பழங்கால தாத்தா.

இவர்கள் ஒவ்வொரும் பரியனை கையாளும் விதத்தில் தான் அவன் சமாதானம் அடைவதும்,எதிர்ப்பதும்,திருப்பி அடிப்பதும் என படம் கூறுகிறது. If equality is denied everything is denied என்ற சூழலே பரியனை 'நான் யார்?' என கேள்வி கேட்க வைக்கிறது. இதன் நீட்சியே கிளைமேக்ஸில் டீ டம்ளர் மூலமாக "அனைவரும் சமம்" என உண்மையை உணர்த்துகிறது.
 - Prem ❤

Thursday, September 10, 2020

Charlie & Neelakasham Pachakadal Chuvanna Bhoomi (NPCB) :

தேடல் - பிறந்தது முதல் இறப்பது வரை மனிதன் வாழ்க்கையில் எதாவது ஒன்றை தேடிக் கொண்டே இருக்கின்றான்.

பயணம் - தன்னை தானே உணர்ந்து கொள்ளவும் வாழ்க்கையில் புதுவிதமான அனுபவம் பெறவும் பயணம் மேற்கொள்கிறான்.

தேடலையும் பயணத்தையும் வேறொரு குறிப்பிட்ட நபருக்காக அர்பணித்து ஒருவருக்கு கிடைக்கும் தன்னுணற்வை பற்றியே சார்லியும் NPCBயும் கவித்துவமான காட்சிகளால் பேசுகிறது.

சார்லி என்ற முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவனை பற்றி தனக்கு கிடைத்த குறிப்பு புத்தகத்தின் வாயிலாக அவனை பற்றி தெரிந்து கொண்டும் மற்றவர்கள் செவி வழியாக சொல்வதை கேட்டும் அவன் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டு அவனை தேடி செல்கிறாள் டெஸ்ஸா. சார்லியால் உதவி பெற்ற பலர் வாயிலாக சார்லியின் குணத்தை பற்றி தெரிந்து கொண்டு அவள் மீது காதல் வயப்படுகிறாள். அவனை சந்திக்கும் தருணத்தில் அவளது தேடலுக்கும் காதலுக்கும் விடையே Charlie.

தன் காதலியை தேடி கேரளாவில் இருந்து நாகலாந்திற்கு Road travel மூலமாக பயணப்படுகிறான் கசிம். தான் செல்லும் வழியில் அவனை போலவே Road trip மேற்கொள்ளும் ஒரு நண்பர்கள் குழு, கொல்காத்தவில் உள்ள குறுநில கிராம மக்கள், கொல்கத்தா தாண்டி ஒரு நெடுஞ்சாலையில் தனியாய் சைக்கிள் கடை நடத்தும் மலையாளி, அஸ்ஸாமில் கலவரத்தில் மாட்டிக்கொண்ட சிறுமி என ஒவ்வொரு மனிதர்களும் கசிமின் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த தாக்கங்களோடு தன் காதலியுடன் சேர்ந்தானா? என்பதை பேசுகிறது NPCB.

படங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இந்த இரண்டு முதன்மை கதாபாத்திரங்களும் அவர்களின் பயணங்களில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் வாழ்வியலும், தேடலில் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், அடையும் ஆனந்தங்களும், நீண்ட தூர பாதைகளும், இவர்களின் இலக்குகளும் என இரு படங்களுமே வாழ்வின் நிதர்சனமான தத்துவங்களை பற்றி பேசுகிறது.

ஆணை தேடி ஒரு பெண்ணும் பெண்ணை தேடி ஒரு ஆணும் என இருபாலரும் தங்களின் Perceptionல் கதையை நகர்த்துவதும், தங்கள் உள் மனத்தில் பேசிக்கொண்டே அகத்தை உணர்ந்து கொள்வதும், வாழ்க்கையின் அர்த்தத்தை தாங்கள் மேற் கொள்ளும் பயணங்களில் புரிந்து கொள்வதும் என நம்மை அந்த கதாபாத்திரங்களினூடே எளிதாக இணைத்து கொள்ள முடிகிறது. 

Yet another feel good Movies from Malayalam Film Industry 👌.
- Prem ❤

Thursday, September 3, 2020

Ustad hotel (2012) Malayalam :


"வயிறு நிறையற மாதிரி யாரு வேணாலும் சமைக்கலாம். ஆனா சாப்பிடறவன் மனசும் நிறையனும்".

 - படத்தில் வரும் வசனம். இதுவே இப்படத்தின் அடிநாதம். கேரளாவும், அந்த மக்களின் உணவின் ரசனையும், சமைக்கும் விதமும்,கைப்பக்குவமும்,ஈகை குணமும்,கடலும்,அன்பும்,நட்பும் என படம் பேசும் பேசு பொருட்கள் ஏராளம். கூடவே தாத்தாவிற்கும் பேரனுக்குமான உன்னத உறவை மென்மையாக சொல்லியிருக்கிறார்கள் ஸ்கிரிப்ட் எழுதிய அஞ்சலி மேனனும் இயக்குனர் அன்வர் ரஷிதும்.

'உஸ்தாத்' என்றால் மாஸ்டர் என்று மலையாளத்தில் பொருள். அதற்கேற்ப ஒரு கடற்கறையோரம் இருக்கும் உணவகத்தை நடத்திக் கொண்டிருக்கும் வயதான முதலாளிக்கு உணவின் பாலுள்ள பற்று,ஈடுபாடு,அக்கறை என உணவுக்கும் மனிதனுக்கும் உள்ள காதலை படம் கவித்துவமாக வெளிப்படுத்துகிறது. சமையல் கலையின் மேலுள்ள உணர்வை இவ்வளவு துல்லியமாக வேறு எந்த நடிகனாலும் வெளிப்படுத்த முடியாது. திலகன் என்ற சிறந்த நடிகன் கரீம் இக்காவாக வாழ்ந்து காட்டினார். இதுவே அவரின் கடைசி படம்.

பிடித்தது செய்ய முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் பகட்டான வாழ்க்கையை தூக்கி எறிந்து சொந்த நாட்டிற்கு வந்து மனதுக்கு பிடித்த Chef வேலை பார்த்து தன் தாத்தாவின் பாரம்பரியத்தை தொடரும் இளைஞன் துல்கர் சல்மான் தன் அப்பாவிற்கும் தாத்தாவுக்கும் இடையே உறவுகளின் மேன்மையை நிலை நிறுத்துகிறார். 

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பசியால் வாடும் மனிதர்களுக்கு உணவு வழங்குதலின் மேன்மையையும் தேவையையும் உணர்த்தும் விதமான காட்சிகளும் படத்தில் உண்டு. 

படம் முழுக்கவே உணவு தான் பிரதான அம்சமாய் சுழன்று கொண்டிருக்கிறது. பிரியாணி, சுலைமாணி(கட்டஞ்சாயா), அசைவங்கள் என பல்வேறு விதமான உணவுகள் பற்றியும் படத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டுகிறது. இதற்கேற்ப வசனங்களும், ஒளிப்பதிவும், இசையும் துணை நின்றிருக்கிறது‌.

படத்தில் வரும் மற்றொரு Heart touching உண்மையான வசனம் :

"பெரும்பாலும் மனித உயிர்கள் எந்த விஷயத்திலும் திருப்தியடைய மாட்டார்கள். மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சாப்பாட்டு விஷயத்தில் அப்படி இல்லை. ஒருவரின் வயிறு நிரம்பி விட்டால், போதும் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்".

Ustad Hotel - பல உண்மைகளை பிரதிபலிக்கும் படைப்பு‌.

- Prem ❤