சாதியும் அதன் படிநிலைகளும் கட்டமைப்பும் உள்ள சமூக சூழலில்,கிராமத்திலிருந்து இருந்து கல்லூரிக்கு சட்டம் படிக்க வருகிறான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவனான பரியன். அவனை சக மனிதனாக பார்த்து ஆதரிக்கும் மனிதர்களும், அவனின் சாதியை முன்னிறுத்தி வெறுக்கும் சாதிவெறியர்களும் - இவர்களின் தாக்கமும் தான் அவன் படித்து பட்டம் பெறுகிறானா?இல்லையா? என்று தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட இருவேறு தன்மை கொண்டவர்களின் முகங்கள் :
அன்பு மட்டுமே நிறைந்த ஜோ. பரியனின் தோழி, தேவதை. தன்னை சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாதி சாக்கடையை பற்றி அறியாத ஒரு நல்ல மனசுக்காரி.
தன் சாதியில் உள்ள சக மிருகங்களுக்கு பயப்பட்டு பரியனிடம் " உன் கூட சேர்த்து என் பொண்ணையும் கொண்ணு போட்றுவானுக" என மகளின் காதலை ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மதில் மேல் பூனையாக சாதிப்பற்றுடன் வாழும் ஜோவின் தந்தை.
தன் மீதும் அரசியல் மூலமாக சாதி பின்னப்பட்டிருந்தாலும் அதை எல்லாம் பார்த்து பழகாமல் பரியனுக்கு உண்மையான நண்பனாக வரும் யோகிபாபு.
"அம்பேத்கர் மாதிரி ஆக வேண்டும்" என பரியன் சொன்னவுடன் அவனை கலகக்காரனுக்கு மேலே பார்க்கும் ஒரு 'வகையான' கல்லூரி முதல்வர் & அதே வார்த்தையை படித்தவுடன் பரியனை அழைத்து படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லி சமன் செய்யும் மற்றோரு 'வகையான' முதல்வர்.
கோட்டாவில் வந்ததை பொறுத்து கொள்ள முடியாமல் அதை குத்தி காட்டும் Male ஆங்கில ஆசிரியர் &" காலத்துக்கும் BABL மேல கோடு வராம பாத்துக்கோ" என கரிசனத்துடன் சொல்லும் தேவதை டீச்சர். இந்த முரணானது பரியன் பிற்காலத்தில் பிரச்சனையில் ஈடுபடும்போது ஆங்கில ஆசிரியர் முதல்வரிடம் அவனை சஸ்பெண்ட் செய்ய சொல்வதும் & தேவதை டீச்சரோ "என்ன சார் நீங்களே அவனை என்ன வேணாலும் பண்ண சொல்றீங்க, சண்டை போட போறான்" என ஆதங்க படும் போதும் கூட வெளிப்படும்.
காலகாலமாக தொடர்ந்து ஆணவக்கொலையை ஒரு சேவை போல் செய்து கொண்டிருக்கும் சாதிதிமிர் நிறைந்த ஒரு பழங்கால தாத்தா.
இவர்கள் ஒவ்வொரும் பரியனை கையாளும் விதத்தில் தான் அவன் சமாதானம் அடைவதும்,எதிர்ப்பதும்,திருப்பி அடிப்பதும் என படம் கூறுகிறது. If equality is denied everything is denied என்ற சூழலே பரியனை 'நான் யார்?' என கேள்வி கேட்க வைக்கிறது. இதன் நீட்சியே கிளைமேக்ஸில் டீ டம்ளர் மூலமாக "அனைவரும் சமம்" என உண்மையை உணர்த்துகிறது.
- Prem ❤
No comments:
Post a Comment