Tuesday, February 9, 2021

Tamasha (2015) :


காதலுக்கு எந்த வித அளவுகோலும் கோட்பாடும் தேவையில்லை. காதலில் இருக்கும் இருவரும் தங்களின் இயல்பு மாறாமல் ஒருவர் மீது மற்றொருவர் சார்ந்து இருக்கலாம். ஒருவரின் விருப்பங்கள் அறிந்து அதற்கேற்ப இணையை சுதந்திரமாக செயல்பட விடலாம். குறைகளை விடுத்து நிறைகளை மட்டுமே காதலில் அறிய முற்படலாம். இப்படி வேறுபட்ட காதலில் தன்மையை இரண்டு முதன்மை கதாபாத்திரங்கள் கொண்டு அறியும் படமே Tamasha .

வேத் - தாரா வெளிநாட்டில் முதலில் தங்கள் உண்மையான அடையாளங்களை விடுத்து ஒருவருக்கொருவர் பழகிக் கொள்வதும், அந்த இயல்பில் வேதின் மேல் தாரா காதல் கொள்வதும் என புதுவிதமாக இருவருக்குள்ளும் நிகழ்வுகள் துவங்கி ஜாலியாக பழகுகிறார்கள்.

அதன் பிறகு இந்தியாவில் ஒருவருக்கொருவர் தங்களின் உண்மையான அடையாளங்களை அறிந்து நிழலில் இருந்து வெளிவந்து மறுபடியும் நிஜத்தில் காதலிப்பதும் அதில் தாங்கள் அடையும் ஏமாற்றங்கள்,பிரச்சனைகள்,பிரிவுகள் என காதலின் இனிப்பு-கசப்புகளில் படம் பயணிக்கிறது.

வேத் ஆக ரன்பீர் கபூர். தன்னை அசலாட் இளைஞனாக காட்டி கொள்வதும், காதலி பிரிந்த சென்ற காலத்தில் அவள் இல்லாமையில் நினைவுகளின் வழியாக காதலை புரிந்து கொள்வதும், தன் அப்பாவிடம் தன்னை பற்றி புரிய வைக்கும் காட்சியிலும் என தன் நடிப்பை கொட்டி தீர்த்திருக்கிறார். தாராவாக தீபிகா படுகோனே. நமக்கு பிடித்தமான நபரின் அன்பிலும் அரவணைப்பிலும் எடை போடாமல் காதலை அனுபவிக்கலாம், தான் பார்த்த காதலின் பிம்பம் உடையும் போது அதில் சிக்கி தவிப்பதை இயல்பாக காட்டியிருக்கிறார். இருவரும் இணைந்து சரியான புரிதல் அமைந்து விட்டால் பிரிந்து சென்ற உறவில் மறுபடியும் இணைந்து காதலை மீட்டெடுக்கலாம் என்ற உண்மையை தங்கள் நடிப்பில் உணர்த்தி காட்டியிருக்கிறார்கள்.

இசை A.R ரகுமான். ரொமாண்டிக் படங்களில் எப்போதும் போல் தன் தரமான இசையை பாடல்களிலும் பிண்ணனியிலும் அள்ளி தந்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு படத்தின் நுண்ணுர்வுகளை அழகாக படம் பிடித்திருக்கிறது.

இந்த அனைத்து சிறப்புகளையும் ஒருங்கிணைத்து காதலின் பல பரிமாணங்களை சொல்லி காதலின் உணர்வுகளை ரசிகனுக்கு கடத்திய இயக்குனர் Imitiaz Ali க்கு 👌❤

- Prem ❤

No comments:

Post a Comment