Monday, December 7, 2020

Dear Comrade

Dear Comrade  :

தமிழ் சினிமா தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமாக தகவமைத்து கொள்ளும். ஒரே மாதிரியான கதைகள் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒரு புது இயக்குனர் தேவதூதன் போல் வந்து ஒரு விருட்சத்தை விதைத்து விட்டு ரசிகர்களின் ரசனையை உயரத்துவார். அப்படி 2012 ல் தமிழ் சினிமா வரலாற்றில் பல சென்டிமென்ட்களை உடைத்து தன் ஒவ்வோர் படைப்பில் வாயிலாக சமூகத்தை அக்கறையோடு அணுகும் கலகக்காரனே இயக்குனர் பா. ரஞ்சித். 

டைட்டில் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே "அட்டகத்தி" என்ற தலைப்பை வைத்து கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தி "யார் இவர்?" என்ற கேள்வியை உருவாக்கியது.

தமிழ் சினிமாவில் வடசென்னை பகுதியை தவறாக சித்தரித்து கொண்டிருந்த பல  இயக்குனர்களுக்கு மத்தியில் அதன் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்வியலையும் அவர்களை சூழ்ந்துள்ள அரசியலையும் "மெட்ராஸ்" என்ற பெயர் மூலமாக தமிழ் சினிமாவிற்கும் அந்த இயக்குனர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய சுடர் ஒளி.

"கபாலி" என்ற பெயரை வில்லனின் அடியாட்களாக வரும் துணை கதாபாத்திரங்களுக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் வைத்து கொண்டிருந்த மட்டுமே வந்த படங்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தின் தலைப்பாக வைத்து கதாநாயகனுக்கு அந்த பெயரை சூட்டி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

காலாவில் கருப்பு+நீலம்+சிவப்பு வண்ணங்கள், தான் தயாரித்த பரியேறும் பெருமாளில் சாதிய அரசியலின் கோர முகம் என தான் இயக்கும் தயாரிக்கும் படங்களில் சமூகநீதி பேசும் நிஜ போராளி.

மேலும் பொதுவெளியில் Casteless Collective, கூகை திரை நூலகம், வானம் கலை திருவிழா என தன்னை சமூக செயல்பாட்டாராகவும் தன் செயல்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார். 

அவர் எழுதிய வசனம் அவருக்கே என்றும் பொருந்தும் படியாக இருக்கிறது - "நான் கால் மேல கால் போட்டு உக்காரருது தான் உன் பிரச்சினைனா நான் கால் மேல் கால் போட்டு தான் உக்காருவேன்டா ஸ்டைலா கெத்தா".
- Prem ❤

Tuesday, December 1, 2020

Emotional அண்ணாமலை :


படத்தில் ஒரு காட்சியில்

குஷ்பு to ரஜினி : கள்ளம் கபடம் இல்லாம எப்போ பார்த்தாலும் குழந்தை மாதிரி சிரிச்சுகிட்டே இருப்பீங்களே, அந்த பழைய சிரிப்ப நான் மறுபடியும் பாக்கனும்ங்க.

ரஜினி: அந்த அண்ணாமலை செத்து பல வருஷம் ஆச்சு..

இந்த உரையாடலுக்கு முன்பாக ரஜினி தனது மகள் தன் எதிரியின் மகனை விரும்புகிறாள் என அறிந்து அவளுக்கு பொறுமையாக அறிவுரை கூறி, அவள் அதை கேட்காத பட்சத்தில் அவளை ஆக்ரோஷமாக அடித்து, தன் இயல்பில் இருந்து வெளியே வந்து ருத்ரதாண்டவம் நிகழ்த்தி தன் நிலையை மனைவியிடம் கூறிவிட்டு வெறுத்து போய் நிம்மதியை தேடி வெளியே போவார். ஒரு அமைதியான இடத்திற்கு சென்று தனிமையில் நின்று கொண்டு இருக்கும்போது அவ்வழியே மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்லும் ஒருவன்,மனம் போன போக்கில் தன் நிம்மதியை பகிரும் வகையில் ஏதோ ஒரு நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டு போவான். இதை பார்க்கும் ரஜினி சட்டென ஒரு கனம் மனது இளகி, தன் பழைய நினைவுகளை கிளறி நினைத்து பார்த்து ஒரு புன்னகையுடன் ஆனந்த கண்ணீரில் நனைந்து, காரின் கண்ணாடி வழியாக தன் முகத்தை பார்த்து feel செய்வார். அதாவது நிம்மதியான பால்கார அண்ணாமலைக்கும் நிம்மதியை இழந்த இந்த அண்ணாமலைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வார். நம் எல்லோர் வாழ்விலும் இது போல் நினைத்து பார்க்க பல நல்ல பசுமையான நினைவுகளும் அதை நினைக்கும் சூழலும் அமைந்து கொண்டிருக்கும். நான் பார்த்த படங்களில் இதுவரை திரையில் இருக்கும் எந்த ஒரு நடிகனும் இப்படி Nostalgic உணர்வை படம் பார்ப்பவர்களுக்கும் இவ்வளவு நுணுக்கமாக கடத்தியதில்லை. இந்த காட்சி முடிந்தவுடன், வீட்டிற்கு வந்து தன் வாழ்வில் உள்ள முக்கிய பெண்களான அம்மா-மனைவி-மகள் முன்னிலையில் "ஒரு பெண் புறா கண்ணிரில் தள்ளாட" என்று பாசம்,வலி,இழப்பு,விரக்தியுடன் பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு முகபாவனைகள் அமைத்து கஷ்டப்பட்டு நடித்து தள்ளாமல், ரொம்ப casual ஆக பாடல் முழுவதும் தன் பழைய வாழ்க்கையின் நினைவுகளை எண்ணி பார்த்துக்கொண்டே வலம் வருவார். படத்தில் ஏகப்பட்ட மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என இருந்தாலும் மேற்குறிப்பிட்ட இந்த பத்து நிமிட காட்சியில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர பிரதிபலிக்கும் முத்தாய்ப்பாக இருக்கும் இக்காட்சி.

அண்ணாமலை வெறும் மாஸ்படம் மட்டும் அல்ல, ரஜினி என்ற Greatest Performerக்கு நடிக்க தீனி போட்ட படம்.

- Prem ❤

Saturday, November 21, 2020

Aanandam (2016) :



ஒரு நெடுந்தூர தனிமையான பேருந்து பயணத்தின் போது கேட்கும் இளையராஜாவின் பாடல்கள் நம்மை தட்டி கொடுத்து - தாலாட்டி - காற்றில் மிதக்க விட்டு - விழி நினைத்து - மனதில் உள்ள ரணங்களை மறக்க செய்து - புத்துணர்வு தருவது போல ஒரு இரண்டு மணி நேர திரைப்படம் நம்மை அவ்வாறே தாலாட்டி தன்ணுணர்வில் ஆழ்த்தினால், அதற்கான விடையே ஆனந்தம்.

அன்றாடம் நம் வாழ்க்கையில் நிகழும் விஷயத்தையோ அல்லது வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஒவ்வொருவரும் கடக்கும் நிகழ்வையோ வைத்து ஒரு முழு திரைப்படமாக தருவதில் கில்லாடிகள் கேரளத்து படைப்பாளிகள். அப்படியாக  கல்லூரி மாணவர்கள் செல்லும் Industrial Visit பயணத்தையே மையமாக வைத்து நம் உணர்ச்சிகளில் விளையாடுவதே இப்படத்தின் அடிநாதம். இதில் கேரளத்தை தாண்டி மைசூர், ஹம்பி, கோவா என கதைகளம் அமைத்து அந்த ஊர்களின் பசுமையான locationகளை துணைக்கொண்டு நம் மாணவ பருவத்தை  கண் முன்னே காட்டியுள்ளனர் இந்த படத்தின் Makers. இந்த படத்தின் Makers அனைவருக்கும் இதுவே முதல் படம்.

இளமை பருவத்தில் ஆண்களுக்குள் அரும்பும் காதல், அது ஏற்படுத்தும் அலாதியான இன்பம், காதலியின் சின்னச்சின்ன சமிக்ஞைகளில் இருக்கும் ஈர்ப்பு, அழகில் விழுந்து மெய்மறக்கும் தருணம் என பல ரசனையான நுணுக்கமாக திரையில் சொல்லியிருக்கிறார்கள். காதலை மட்டுமல்லாமல் நட்பின் உன்னதத்தையும், Friends gang ன் கலாட்டா குறும்புகளையும், காதலுக்கு நட்பு உதவுவதையும், நட்பில் வரும் சிறிய ஊடல்கள் என நட்பின் அனைத்து பரிணாமங்களையும் பதிவுசெய்ய தவறவில்லை.

Positivity என்ற விஷயத்தை எந்த கலையும் நமக்குள் எளிதாக கடத்தி விடலாம், சினிமா என்ற கலை Visually & Audibly நமக்கு அதை துளிர்க்க செய்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.

உங்களின் கடந்த கால நினைவலைகளை நினைத்து பார்த்து அதில் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களையும்,  சோகங்களையும், புதைந்து கிடக்கும் குற்றவுணர்ச்சிகளையும், இப்பொழுது தெரியும் சிறுபிள்ளை தனமான நிகழ்ச்சிகளையும் மீட்டெடுக்கும் அழகான படமே ஆனந்தம்.
- Prem ❤

Saturday, November 7, 2020

Hey Jude (2018) :



காதல் இல்லாமல் பழகும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அன்பும் நட்பும் அக்கறையுமே திளைத்தோங்கும். கூடவே இவர்களுக்குள்ளும் வரும் கோபங்களும் முரண்பாடுகளும் சிறிது கால பிரிவுகளும்.
குறைபாடுகளை தகர்த்து அதனுள் ஊடுருவி நிறைகளை தேடுவது அன்பு. தங்களுக்கு அமைந்த வாழ்க்கை சூழலில் இரண்டு Extreme குறைபாடுகளில் இருக்கும் இருவருக்குள் நடக்கும் நிகழ்வுகளே Hey Jude. 

Autism(மதியிறுக்கம்) குறைப்பாடுள்ள ஜூடும் Bipolar Disorder (இருமுனை பிறழ்வு) குறைப்பாடுள்ள கிரிஸ்டலும் ஆரம்பத்தில் மோதலில் சந்தித்து சண்டையிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவருக்கொருவர் மற்றவருக்கு இருக்கும் குறைபாடுகளை அறிந்து அதில் இருந்து வெளி வர உதவி செய்து கொள்கிறார்கள் நண்பர்களாய். அவர்களால் முழுதும் தங்களை மாற்றிக் கொள்ள முடிந்ததா? மற்றவரை புரிந்துகொள்ள முடிந்ததா? என்பதை பற்றி மென் நகைச்சுவை கலந்து யதார்த்தமாக படம் பேசுகிறது. 

படத்தில் முதலில் கவனிக்க பட வேண்டியது முதன்மை கதாபாத்திரங்களின் Characterization. உலகத்தோடு தன்னை இணைத்து கொள்ளாத ஜுடுக்கு கடல் சார்ந்த விஷயங்கள் ( Oceanography) பிடிப்பதே போல் அமைத்ததும், கோபம் சோர்வு என இரண்டிலும் பயணிக்கும் கிரிஸ்டலை இசையோடு இணைத்ததும் இயக்குனரின் Brilliance. இருவரின் தந்தை கதாபாத்திரங்களும் கவனிக்கப்பட வேண்டியதே.

மலையாள நடிகர்களில் நான் பார்த்து வியந்தது - தங்களின் Star value ஏற்ற கதைகளை தேர்வு செய்யாமல் தங்களுக்கு வரும் Scriptல் இருக்கும் கதாபாத்திரங்களில் தங்களை பொருத்தி கொள்ளுவது தான். Autism குறைபாடுள்ள இளைஞனாக பிசகாமல் வித்யாசமான Mannerism காட்டி அதே வேளை இயல்பாகவும் படம் முழுக்க ஜூடாக இருக்கிறார் நிவின் பாலி.   கிரிஸ்டலாக நம் திரிஷா, மலையாளத்தில் இது இவருக்கு முதல் படம். எப்படி லேசா லேசா வில் தன்னை சுற்றிய கதை அமைந்ததோ அதோபோல் இதிலும் ஜீட்க்கு நிகரான கதாபாத்திரம்‌.

ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன். அங்கமாலி டைரிஸ்,சர்க்கார்,ஜல்லிக்கட்டு போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்தவர். 75 சதவீத படம் கோவாவில் நடப்பதால் இதிலும் Fresh ஆக தன் ஒளி ஓவியத்தை நிகழ்த்தியுள்ளார்.

உலகத்திற்கு வித்தியாசமாக தெரிந்தாலும் தங்கள் உலகத்திற்கும் தங்களுடன் இருக்கும் மனிதர்களுக்கும் Special ஆக இருப்பவர்களின் வாழ்வியலே Hey Jude.

- Prem ❤

Sunday, November 1, 2020

Kumbalangi Nights :


கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் இருக்கும் தீவு போல் அமைந்த குக்கிராமமே கும்பளாங்கி‌. அங்கு வாழும் மனிதர்கள், அவர்களின் மீன் பிடி தொழில், வலையை லாவகமாக வீசி கண்கள் ஈர்க்கும் வகையில் மீனை பிடிக்கும் விதம், அவர்களின் கடல் சார்ந்த உணவு பழக்கவழக்கங்கள், பொழுது போக்கு, உறவுகள், அந்த தீவை சுற்றி முழுவதும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பசுமை நிறைந்த மரங்கள்,காடுகள், கடல்,காயல், ரம்மியமான காற்று, படகு வழி போக்குவரத்துகள், வெளி மாநிலத்தாருக்கும் வெளிநாட்டினருக்கும் ஏற்ற சுற்றுலா ஸ்தலம் என ஒரு கிராமத்தின் முழு வாழ்வியலே இப்படத்தில் விரவி கிடக்கிறது..

கேரளா என்றாலே எழில் கொஞ்சும் அழகு. இதில் இயற்கையோடு சேர்த்து பசுமை நிறைந்த பேரழகை காட்டிய ஒளிப்பதிவாளரும், படம் முழுக்க மெல்லிய இசையுடன் பயணம் செய்த இசையமைப்பாளும் நம் இடத்தில் இருந்தே நம்மை கும்பளாங்கி பகுதிக்கு கொண்டு சென்றது போல் உணர வைத்துள்ளனர்.. 

Perfect casting என சொல்லும் விதமாக கண்கள் பேசும் நடிப்பு அரக்கன் Fahad Fasil, முதிர்ச்சியான நடிப்புடன் எளிமையான Soubin Shahir,காதல் சொட்டும் சின்ன சின்ன முகபாவங்கள் உடன் வலம் வரும் Shane Nigam, பார்த்தவுடன் பிடித்துவிடும் Cute heroine என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் சிறப்பு..

முதல் பாதியில் படம் மெதுவாக நகர்ந்தாலும்  கும்பளாங்கியின் அன்றாட வாழ்க்கை முறை, அங்கு சந்தோஷமாக வாழும் மக்களின் Characteziation என நமக்கு வேறொரு வாழ்வியலை தந்த writer + directorக்கு சபாஷ்..

ரசனையான படைப்புகளை தருவதில் கேரள சினிமாவினர் என்றுமே கில்லாடிகள் தான். அதுவும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ள வெவ்வேறு மக்களின் பண்புகள்,குடும்பம், நட்பு, காதல் என கோர்வையாக கோர்த்து கும்பளாங்கி பகுதியின் அழகியலையும் சேர்த்து என Feel good படைப்பாக அமைந்து இருக்கிறது இந்த கும்பளாங்கி நைட்ஸ்...

- Prem ❤

Friday, October 9, 2020

Dead Poets Society (1989)


"கலை ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா " என்ற ஒற்றை வசனத்தை ஒரு படமே உணர்த்தி சொன்னால் எப்படி இருக்கும்? அதற்கான விடையை Dead poets society. இதனுடன் சேர்த்து மாணவர்கள் வாழ்வில் ஒரு ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கமும் அந்த ஆசிரியருக்கு மாணவர்கள் செய்யும் மரியாதையும் தான் படத்தின் பயணமாக அமைந்த திரைக்கதை.

டீன் ஏஜ் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் புதிய ஆங்கில பேராசிரியராக வந்து சேர்கிறார் ஜான் கீட்டிங். பின் அவர்களுக்கு பாட புத்தகத்தை தாண்டி வாழ்க்கையின் அருமையை,கற்றல் தாண்டி கிடைக்க வேண்டிய அனுபவித்தை, வாழ்க்கையை புது விதத்தில் காணும் கண்ணோட்டத்தை என மாணவர்களுக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் கண்கள் நனைய வாழ்ந்து காட்டுவதே இப்படம். இது எதுவும் போதிக்காமல், documentary போல் அமைக்க படாமல் இருப்பதே இப்படத்தின் சிறப்பு

நாம் படிக்கும் கல்வி என்பது தொழிற்முறைக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஆன கருவியே, ஆனால் கலையோ காதலோ தான் நம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் சாரம்சங்கள் என்பது படத்தில் வரும் வசனம். இதை கவிதை என்ற ஒரு கலையை முன் வைத்து கவிஞர்களுக்காக படத்தில் சொன்னாலும் உலகிலுள்ள ஏனைய கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும்.

படத்தில் பேராசிரியராக நடித்த ராபின் வில்லியம்ஸ் என்ற மகத்தான கலைஞன் அவ்வளவு பரிவாக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் அப்படியே நிஜ பேராசிரியராக வாழ்ந்திருப்பார். கூடவே மாணவர்கள் அனைவரின் நடிப்பும் சிறப்பாக துணையாக அமைந்திருக்கும்.

"Oh captain, My captain", carpe diem என படத்தின் வசனங்கள் படம் பார்த்து முடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இயற்கையின் துணையோடு அமைந்த ஒளிப்பதிவு, மென்மையான இசை படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு.

மனதில் சலனங்கள் ஏற்படுத்தினாலும் ஒரு Positive vibe யும் புத்துணர்ச்சியையும் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் Feel good movie.

- Prem ❤

Saturday, October 3, 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே ;

பேய் படம் பார்த்தால் தான் நமக்கு பயம் வர வேண்டும் என்பதில்லை. ஆழ் மனதின் அமைதியை உருக்குலைத்து குற்ற உணர்ச்சியை கிளர்த்திவிடும் ஒரு காட்சியே போதும் அச்சம், கண்ணிர், மனச்சிதைவு என எல்லாவற்றையும் உள்ளுக்குள் இருந்து எடுத்து பிரளயம் போல் வெடிக்க செய்து விடலாம். அப்படி அமைந்த காட்சியே மகாநதியில் கமல் தன் மகளை விபச்சார விடுதியில் இருந்து மீட்டு வரும் காட்சி. "மகாநதி" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு முதலில் அந்த காட்சியும், அதனால் ஏற்படும் சலனமும் வேதனையும் தான் நமக்குள் இருக்கும் மனிதத்தை துளிர்க்க செய்வதும், ஆண் என்ற அகந்தையை அசைத்து பார்ப்பதும்‌.

காணாமல் போன தன் மகள் கல்கத்தாவில் சோனாகச்சி என்ற ஏதோவொரு இடத்தில் இருக்கிறாள் என அறிந்து கமல் அங்கு செல்வதும் - நேரில் அந்த இடத்தை பார்த்து அதன் சூழ்நிலையை புரிந்தவுடன் மனதில் ஏற்படும் "பதற்றமும்" - உள்ளே சென்று தேடிய பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் தன் மகள் அங்கு இல்லை என்று "ஆசுவாச" படுவதும் - சட்டென அடுத்த நொடி தன் மகளை பார்க்க கூடாத இடத்தில் பார்க்க கூடாத கோலத்தில் பார்த்தவுடன் ஏற்படும் "வலியும்" - அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் மகள் விலகி சென்றாலும் அவளை "தழுவதும்" - பின் சுதாரித்து கொண்டு அவளை தூக்கிக்கொண்டு "பதறி" வெளியே ஓடி வருவதும் - அங்கே அவர்களை பிடித்து வைத்து கொண்டு ப்ரோக்கர் பணம் கேட்கும்போது "குமுறுவதும்" - மற்ற விலைமாதர்கள் அனைவரும் காசு திரட்டி அவனுக்கு வழங்குவதை பார்த்து "நெகிழ்ச்சி" அடைவதும் - அவர்களுக்கு கூனி குறுகி நன்றி தெரிவிப்பது என இத்தனை உணர்வுகள் நிகழ்ந்தது கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல, அந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொரு அண்ணன், தம்பி, அப்பா, மகன், கணவன்,தோழன் என அனைத்து ஆண்களுக்கும் தான்.

இவ்வளவு கனம் மிகுந்த இக்காட்சியில் மனசை ஆறுதல் படுத்துமாறு வரும் வசனம் - ஒரு விலைமாதர் அந்த பெண்ணை பார்த்து "சிரிடி. உன் தெய்வம் வந்திருக்கு , உன்னை கூட்டிட்டு போக" என்று சொல்வது தான்.

ஒருபுறம் மகள் பருவமடைந்த போது அவளை ஜெயில் கம்பி வழியாக ஆதங்கத்தோடு பார்த்த கிருஷ்ணசாமி அதே மகளை சோனாகச்சியில் ஆற்றாமையோடு பார்ப்பது என்று கமல் என்ற நடிகன் வித்தியாசம் காட்ட, மறுபுறம் பாவத்தை தொலைக்கும் கங்கை நதிக்கரையில் தன் செல்வத்தை கண்டுபிடிப்பதாக காட்சி அமைத்த திரைக்கதை ஆசிரியர் கமல் கவனிக்க பட வேண்டியவர். 

After all these Haunting moments, now Ilayaraja entered with his Harmonium music for consoling our souls & followed by Kamal in his voice singing எங்கேயோ தெக்கு திசை காணாத தூரம் தான்...

- Prem ❤