Tuesday, June 22, 2021

தர்மதுரை (2016) :


படத்தில் மூன்று விதமான காதல் உணர்வுள்ள பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் வருகிறார்கள். 

1. ஸ்டெல்லா: தான் விரும்பும் ஆண் நண்பனிடம் வெளிப்படையாக தன் காதலை சொல்பவள்.
2. சுபாஷிணி: தன் காதலை தனக்குளே மறைத்து வைத்து அந்த ஆணுடன் நட்புடன் பழகுபவள்.
3. அன்பு செல்வி: தன்னை பிடித்ததாக வந்து சொல்லும் தனக்கு ஓரளவுக்கு பரிச்சியப்பட்ட ஆணிடம் தன் அப்பாவின் கல்யாண சம்மதத்துடன் காதலிக்கும் கிராமத்துப் பெண்.
- இந்த மூவரையும் நன்றாக புரிந்து கொள்ளும் தர்மதுரை, ஸ்டெல்லாவிடம் தன் இள வயதையும் சூழ்நிலையையும் எடுத்து சொல்லி எதிர் காலத்தில் உனக்கு இதே அன்பு என் மேல் இருந்தால் அப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், சுபாஷிணி தன் கணவனை பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கல்லூரியில் தன்னை ஒரு தலையாய் காதலித்தாக தெரிந்த பிறகு அதனுடே இனி நாம் living together வாழ்க்கை வாழலாம் என்பதும், அன்பு செல்வியின் ஆசைபடியே பெண் பார்க்கும் படலம் முடிந்து பெற்றோர் சம்மதத்துடன் முழுமையாக காதலிப்பது என தர்மதுரை  Mature ஆக கையாள்வது என ஆண்-பெண் உறவு, காதல், உளவியல் தான் இந்த படத்தின் ஆகச் சிறந்த சிறப்பு. 

படத்தை தன் தோளில் சுமப்பது விஜய் சேதுபதி. தன் வாழ்க்கையில் நிகழும் Active - inactive, Pause - restart, மூன்று பெண்களின் காதலை கையாளும் விதம் என பல்வேறு நிலைகளை நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார். தன் மகன் வாழ்க்கையை வெறுத்து தோல்வியில் இருக்கும் போது அவனுக்கு துணை நிற்பதும், தன் மகன் கோபத்தில் கொலை செய்ய துணியும் போது அவனை தடுத்து கட்டியணைத்து ஆறுதல் படுத்துவதும், மற்றவர்களால் தன் மகன் உயிருக்கு ஆபத்து வரும் போது அவனை வீட்டை விட்டு வெளியேற்றி அவனை காப்பாற்றுவதும் என ராதிகா ஒரு கிராமத்து தாயை அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.

மேலும் படத்தில் இலவச மருத்துவம், மருத்துவர்களின் கண்ணியம், மாணவர்களுக்கு ஆசிரியர் மேல் இருக்கும் மரியாதை, அந்த ஆசிரியருக்கு காமராஜர் மேல் இருக்கும் மரியாதை, பெண்ணின் அன்பால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வருவது,திருநங்கையின் கஷ்டம்,மறுமணம், கால்நடைகள்,மலைகிராமம், கிராமத்தின் எளிய மக்கள், கோயில்கள்,வயல்வெளி, நூலகம், கணவாய் என இவ்வளவையும் விரிவாக Nativity + geography சேர்த்து தந்த சீனு ராமசாமி சமகால இயக்குனர்களின் ஆக சிறந்த படைப்பாளி..

- Prem ❤

Monday, June 14, 2021

பருத்திவீரன் (2007) :



ஒரு கிராமம் - அதற்குள் இருக்கும் பொட்டல் காடு,ஆலமரங்கள்,செம்மண் புழுதி,ஆட்டுக்குட்டிகள்,சிறுதெய்வ வழிபாடு,கிராமிய கலைகள்,பனைமரங்கள்,ஓலை குடிசைகள்,மாட்டு வண்டிகள்,கருமேகம்,சுட்டெரிக்கும் சூரியன்,மீசை வைத்த தலைப்பாக்கட்டுகள்,அலப்பறை செய்யும் இளவட்டங்கள்,அப்பாவி தாய்மார்கள்,அப்பத்தாக்கள்,கரிசல் நிலம்,திருவிழா,மக்களின் பேச்சுவழக்கு,அரிவாள்,சட்டம் என அந்த கிராமத்தில் நம்மையும் கூட சேர்த்து உலாவவிட்ட படம் என்றால் அது பருத்திவீரன் தான்.

இப்படிப்பட்ட கிராமத்து சூழலில் ஒரு உயிரோட்டமான காதல் - அதை சுற்றி பின்னப்பட்ட சாதி வெறி - அதனூடே நடக்கும் வெட்டு குத்து,கொலை,ரத்தம் என படம் பேசிய விஷயங்கள் ஏராளம்.

ஒரு பெண்ணின் மேல் ஆண் காதல் கொண்டு அவளின் பின்னால் சுற்றி வருவது,அவள் மேல் தீவிரமாக இருப்பது என்பது தான் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் முத்தழகு தன் அறியா பருவத்தில் முளைத்த காதலால் பருத்திவீரன் பின்னால் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது, அவனை தனதாக்கிக் கொள்ள வீரமும் மிடுக்குடனும் திரிவது, அவனுக்காக அப்பாவுடன் சவால் விடுவது என வித்தியாசமாக ஆக Characterization அமைக்கப்பட்டிருக்கும். அந்த துடிப்பும் வேகமும் நிறைந்த முத்தழகாக பிரியாமணி கம்பீரமாக நடித்திருப்பார்.

லந்து லவுட்டு செய்யும் சண்டியராகவும் தனக்குள் காதல் வந்தவுடன் ஆண்களுக்குள் இருக்கும் வெட்கத்தை வெளிப்படுத்தும் வெள்ளந்தி என பருத்திவீரனாக தன் அறிமுக படத்திலேயே கார்த்தி அசத்தியிருப்பார். உயிர் குலைய வைக்கும் அந்த கிளைமேக்ஸில் இருவரும் தாங்கள் அதுவரை இருந்த கதாபாத்திர கோட்பாட்டில் இருந்து விலகி வேறு ஒரு நடிப்பு தளத்தில் நடித்திருப்பார்கள்.

செவ்வாழை,கழுவன்,குட்டி சாக்கு,பொணந்தின்னி,டக்லஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தில் இவர்கள் கூடவே பயணித்திருப்பார்கள்‌.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது போல் யுவன் சங்கர் ராஜா மண் மணம் மாறாத நாட்டுப்புற இசையால் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார்.

பாரதிராஜா 80's ,90‌'sகளில் இருந்த கிராமத்தை திரையில் காண்பித்தார். அதற்கு பிறகான தசாப்தத்தில் கிராமத்து மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் அச்சு அசலாக காண்பித்த இயக்குனர் என்றால் அது அமீர் தான்.

Paruthiveeran - A Raw blood shedded love story set-up in village backdrop. 👏

- Prem ❤

Friday, February 12, 2021

உன்னாலே உன்னாலே :


ஆண் பெண் உறவு சிக்கல்கள் பற்றி பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே பேசிய இப்படம், இன்றைய சூழலுக்கும் பொருந்தும் படமாகவே இருக்கிறது ( Ilamai Ullasam). 

ஆண்கள் கண்ணோட்டத்தை அதிகம் பேசியிருக்கும் இந்தப்படம், காதலில் பிரச்சினை ஆண்களால் மட்டுமே ஏற்படாது என்பதையும், பெண்களாலும் வரும் என்பதை விரிவாக விவாதிக்கிறது (Hello Miss Imsayae Aanadha thollai)

 ஒரு ஆணின் சூழல், அவனுக்கு ஏற்படும் காதல், அதில் அவன் சந்திக்கும் பிரச்சினை, அவன் மனதின் ஊசலாட்டம், பரிதவிப்பு, இயலாமை என புதியதாய் ஆண்களின் உளவியலை அழகாய் அணுகிய விதம் சிறப்பு. (June Ponal July Katrae)

ஒரு ஆணின் வாழ்வில் வரும் இரு பெண்கள், அவர்களால் இவனுக்கு கிடைக்கும் புதிய உலகம், காதலியுடன் யதார்த்த பிரச்சினை, பின் அவர்களின் நியாமான பிரிவை பற்றி இவ்வளவு Matured ஆக வேறு எந்த படமும் காட்டியதில்லை‌‌. (Mudhal Naal Indru Ethuvo Ondru)

ஒரு பெண் தன் காதலனை சரியாக புரிந்து கொள்ளதை எண்ணி தன் தவறை உணர்ந்த தாக வரும் Climax அட்டகாசம். ( Unnalae Unnalae Vin Aala Sendranae ) 

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல் காதலின் அருமை காதல் இல்லாமையில் தான் புரியும் என்பதை கார்த்திக் & ஜான்சி இருவருமே பல இடங்களில் உணர்வது படத்தின் the best thing. ( Siru Siru Uravugal Pirivugal)

 படத்தை Feel good ஆக Travel செய்ய வைத்ததற்கு மிக முக்கிய காரணம் ஹாரிஸ் ஜெயராஜின் பிண்ணனி இசை, அந்த காலகட்டத்தில் Harris craze உருவாக மிக முக்கியமாக அமைந்து இந்த படத்தின் பாடல்கள்.

இறுதியாக, இயக்குனர் ஜீவா‌. ஒளிப்பதிவாளரே படத்தின் இயக்குனர் என்பது எவ்வளவு பெரிய வரம். பாடல் காட்சிகள், Melbourneன் அழகு என கவிதையாய் கதை சொல்லி இருப்பார். Detailing சொல்கிறேன் என Over Expose செய்து இருந்து பெண்கள், Feministகளின் மனம் புண்பட கூடிய கதை களத்தை தன் Story Telling மூலமாகவும் Bore அடிக்காத Screenplay Flow மூலமாகவும் சரியாக அமைத்திருப்பார்... Really Miss Him..
Feel good movie of that(2k's) decade. 
- Prem ❤

Tuesday, February 9, 2021

Tamasha (2015) :


காதலுக்கு எந்த வித அளவுகோலும் கோட்பாடும் தேவையில்லை. காதலில் இருக்கும் இருவரும் தங்களின் இயல்பு மாறாமல் ஒருவர் மீது மற்றொருவர் சார்ந்து இருக்கலாம். ஒருவரின் விருப்பங்கள் அறிந்து அதற்கேற்ப இணையை சுதந்திரமாக செயல்பட விடலாம். குறைகளை விடுத்து நிறைகளை மட்டுமே காதலில் அறிய முற்படலாம். இப்படி வேறுபட்ட காதலில் தன்மையை இரண்டு முதன்மை கதாபாத்திரங்கள் கொண்டு அறியும் படமே Tamasha .

வேத் - தாரா வெளிநாட்டில் முதலில் தங்கள் உண்மையான அடையாளங்களை விடுத்து ஒருவருக்கொருவர் பழகிக் கொள்வதும், அந்த இயல்பில் வேதின் மேல் தாரா காதல் கொள்வதும் என புதுவிதமாக இருவருக்குள்ளும் நிகழ்வுகள் துவங்கி ஜாலியாக பழகுகிறார்கள்.

அதன் பிறகு இந்தியாவில் ஒருவருக்கொருவர் தங்களின் உண்மையான அடையாளங்களை அறிந்து நிழலில் இருந்து வெளிவந்து மறுபடியும் நிஜத்தில் காதலிப்பதும் அதில் தாங்கள் அடையும் ஏமாற்றங்கள்,பிரச்சனைகள்,பிரிவுகள் என காதலின் இனிப்பு-கசப்புகளில் படம் பயணிக்கிறது.

வேத் ஆக ரன்பீர் கபூர். தன்னை அசலாட் இளைஞனாக காட்டி கொள்வதும், காதலி பிரிந்த சென்ற காலத்தில் அவள் இல்லாமையில் நினைவுகளின் வழியாக காதலை புரிந்து கொள்வதும், தன் அப்பாவிடம் தன்னை பற்றி புரிய வைக்கும் காட்சியிலும் என தன் நடிப்பை கொட்டி தீர்த்திருக்கிறார். தாராவாக தீபிகா படுகோனே. நமக்கு பிடித்தமான நபரின் அன்பிலும் அரவணைப்பிலும் எடை போடாமல் காதலை அனுபவிக்கலாம், தான் பார்த்த காதலின் பிம்பம் உடையும் போது அதில் சிக்கி தவிப்பதை இயல்பாக காட்டியிருக்கிறார். இருவரும் இணைந்து சரியான புரிதல் அமைந்து விட்டால் பிரிந்து சென்ற உறவில் மறுபடியும் இணைந்து காதலை மீட்டெடுக்கலாம் என்ற உண்மையை தங்கள் நடிப்பில் உணர்த்தி காட்டியிருக்கிறார்கள்.

இசை A.R ரகுமான். ரொமாண்டிக் படங்களில் எப்போதும் போல் தன் தரமான இசையை பாடல்களிலும் பிண்ணனியிலும் அள்ளி தந்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு படத்தின் நுண்ணுர்வுகளை அழகாக படம் பிடித்திருக்கிறது.

இந்த அனைத்து சிறப்புகளையும் ஒருங்கிணைத்து காதலின் பல பரிமாணங்களை சொல்லி காதலின் உணர்வுகளை ரசிகனுக்கு கடத்திய இயக்குனர் Imitiaz Ali க்கு 👌❤

- Prem ❤

Monday, December 7, 2020

Dear Comrade

Dear Comrade  :

தமிழ் சினிமா தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமாக தகவமைத்து கொள்ளும். ஒரே மாதிரியான கதைகள் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒரு புது இயக்குனர் தேவதூதன் போல் வந்து ஒரு விருட்சத்தை விதைத்து விட்டு ரசிகர்களின் ரசனையை உயரத்துவார். அப்படி 2012 ல் தமிழ் சினிமா வரலாற்றில் பல சென்டிமென்ட்களை உடைத்து தன் ஒவ்வோர் படைப்பில் வாயிலாக சமூகத்தை அக்கறையோடு அணுகும் கலகக்காரனே இயக்குனர் பா. ரஞ்சித். 

டைட்டில் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே "அட்டகத்தி" என்ற தலைப்பை வைத்து கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தி "யார் இவர்?" என்ற கேள்வியை உருவாக்கியது.

தமிழ் சினிமாவில் வடசென்னை பகுதியை தவறாக சித்தரித்து கொண்டிருந்த பல  இயக்குனர்களுக்கு மத்தியில் அதன் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்வியலையும் அவர்களை சூழ்ந்துள்ள அரசியலையும் "மெட்ராஸ்" என்ற பெயர் மூலமாக தமிழ் சினிமாவிற்கும் அந்த இயக்குனர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய சுடர் ஒளி.

"கபாலி" என்ற பெயரை வில்லனின் அடியாட்களாக வரும் துணை கதாபாத்திரங்களுக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் வைத்து கொண்டிருந்த மட்டுமே வந்த படங்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தின் தலைப்பாக வைத்து கதாநாயகனுக்கு அந்த பெயரை சூட்டி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

காலாவில் கருப்பு+நீலம்+சிவப்பு வண்ணங்கள், தான் தயாரித்த பரியேறும் பெருமாளில் சாதிய அரசியலின் கோர முகம் என தான் இயக்கும் தயாரிக்கும் படங்களில் சமூகநீதி பேசும் நிஜ போராளி.

மேலும் பொதுவெளியில் Casteless Collective, கூகை திரை நூலகம், வானம் கலை திருவிழா என தன்னை சமூக செயல்பாட்டாராகவும் தன் செயல்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார். 

அவர் எழுதிய வசனம் அவருக்கே என்றும் பொருந்தும் படியாக இருக்கிறது - "நான் கால் மேல கால் போட்டு உக்காரருது தான் உன் பிரச்சினைனா நான் கால் மேல் கால் போட்டு தான் உக்காருவேன்டா ஸ்டைலா கெத்தா".
- Prem ❤

Tuesday, December 1, 2020

Emotional அண்ணாமலை :


படத்தில் ஒரு காட்சியில்

குஷ்பு to ரஜினி : கள்ளம் கபடம் இல்லாம எப்போ பார்த்தாலும் குழந்தை மாதிரி சிரிச்சுகிட்டே இருப்பீங்களே, அந்த பழைய சிரிப்ப நான் மறுபடியும் பாக்கனும்ங்க.

ரஜினி: அந்த அண்ணாமலை செத்து பல வருஷம் ஆச்சு..

இந்த உரையாடலுக்கு முன்பாக ரஜினி தனது மகள் தன் எதிரியின் மகனை விரும்புகிறாள் என அறிந்து அவளுக்கு பொறுமையாக அறிவுரை கூறி, அவள் அதை கேட்காத பட்சத்தில் அவளை ஆக்ரோஷமாக அடித்து, தன் இயல்பில் இருந்து வெளியே வந்து ருத்ரதாண்டவம் நிகழ்த்தி தன் நிலையை மனைவியிடம் கூறிவிட்டு வெறுத்து போய் நிம்மதியை தேடி வெளியே போவார். ஒரு அமைதியான இடத்திற்கு சென்று தனிமையில் நின்று கொண்டு இருக்கும்போது அவ்வழியே மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்லும் ஒருவன்,மனம் போன போக்கில் தன் நிம்மதியை பகிரும் வகையில் ஏதோ ஒரு நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டு போவான். இதை பார்க்கும் ரஜினி சட்டென ஒரு கனம் மனது இளகி, தன் பழைய நினைவுகளை கிளறி நினைத்து பார்த்து ஒரு புன்னகையுடன் ஆனந்த கண்ணீரில் நனைந்து, காரின் கண்ணாடி வழியாக தன் முகத்தை பார்த்து feel செய்வார். அதாவது நிம்மதியான பால்கார அண்ணாமலைக்கும் நிம்மதியை இழந்த இந்த அண்ணாமலைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வார். நம் எல்லோர் வாழ்விலும் இது போல் நினைத்து பார்க்க பல நல்ல பசுமையான நினைவுகளும் அதை நினைக்கும் சூழலும் அமைந்து கொண்டிருக்கும். நான் பார்த்த படங்களில் இதுவரை திரையில் இருக்கும் எந்த ஒரு நடிகனும் இப்படி Nostalgic உணர்வை படம் பார்ப்பவர்களுக்கும் இவ்வளவு நுணுக்கமாக கடத்தியதில்லை. இந்த காட்சி முடிந்தவுடன், வீட்டிற்கு வந்து தன் வாழ்வில் உள்ள முக்கிய பெண்களான அம்மா-மனைவி-மகள் முன்னிலையில் "ஒரு பெண் புறா கண்ணிரில் தள்ளாட" என்று பாசம்,வலி,இழப்பு,விரக்தியுடன் பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு முகபாவனைகள் அமைத்து கஷ்டப்பட்டு நடித்து தள்ளாமல், ரொம்ப casual ஆக பாடல் முழுவதும் தன் பழைய வாழ்க்கையின் நினைவுகளை எண்ணி பார்த்துக்கொண்டே வலம் வருவார். படத்தில் ஏகப்பட்ட மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என இருந்தாலும் மேற்குறிப்பிட்ட இந்த பத்து நிமிட காட்சியில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர பிரதிபலிக்கும் முத்தாய்ப்பாக இருக்கும் இக்காட்சி.

அண்ணாமலை வெறும் மாஸ்படம் மட்டும் அல்ல, ரஜினி என்ற Greatest Performerக்கு நடிக்க தீனி போட்ட படம்.

- Prem ❤

Saturday, November 21, 2020

Aanandam (2016) :



ஒரு நெடுந்தூர தனிமையான பேருந்து பயணத்தின் போது கேட்கும் இளையராஜாவின் பாடல்கள் நம்மை தட்டி கொடுத்து - தாலாட்டி - காற்றில் மிதக்க விட்டு - விழி நினைத்து - மனதில் உள்ள ரணங்களை மறக்க செய்து - புத்துணர்வு தருவது போல ஒரு இரண்டு மணி நேர திரைப்படம் நம்மை அவ்வாறே தாலாட்டி தன்ணுணர்வில் ஆழ்த்தினால், அதற்கான விடையே ஆனந்தம்.

அன்றாடம் நம் வாழ்க்கையில் நிகழும் விஷயத்தையோ அல்லது வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஒவ்வொருவரும் கடக்கும் நிகழ்வையோ வைத்து ஒரு முழு திரைப்படமாக தருவதில் கில்லாடிகள் கேரளத்து படைப்பாளிகள். அப்படியாக  கல்லூரி மாணவர்கள் செல்லும் Industrial Visit பயணத்தையே மையமாக வைத்து நம் உணர்ச்சிகளில் விளையாடுவதே இப்படத்தின் அடிநாதம். இதில் கேரளத்தை தாண்டி மைசூர், ஹம்பி, கோவா என கதைகளம் அமைத்து அந்த ஊர்களின் பசுமையான locationகளை துணைக்கொண்டு நம் மாணவ பருவத்தை  கண் முன்னே காட்டியுள்ளனர் இந்த படத்தின் Makers. இந்த படத்தின் Makers அனைவருக்கும் இதுவே முதல் படம்.

இளமை பருவத்தில் ஆண்களுக்குள் அரும்பும் காதல், அது ஏற்படுத்தும் அலாதியான இன்பம், காதலியின் சின்னச்சின்ன சமிக்ஞைகளில் இருக்கும் ஈர்ப்பு, அழகில் விழுந்து மெய்மறக்கும் தருணம் என பல ரசனையான நுணுக்கமாக திரையில் சொல்லியிருக்கிறார்கள். காதலை மட்டுமல்லாமல் நட்பின் உன்னதத்தையும், Friends gang ன் கலாட்டா குறும்புகளையும், காதலுக்கு நட்பு உதவுவதையும், நட்பில் வரும் சிறிய ஊடல்கள் என நட்பின் அனைத்து பரிணாமங்களையும் பதிவுசெய்ய தவறவில்லை.

Positivity என்ற விஷயத்தை எந்த கலையும் நமக்குள் எளிதாக கடத்தி விடலாம், சினிமா என்ற கலை Visually & Audibly நமக்கு அதை துளிர்க்க செய்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.

உங்களின் கடந்த கால நினைவலைகளை நினைத்து பார்த்து அதில் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களையும்,  சோகங்களையும், புதைந்து கிடக்கும் குற்றவுணர்ச்சிகளையும், இப்பொழுது தெரியும் சிறுபிள்ளை தனமான நிகழ்ச்சிகளையும் மீட்டெடுக்கும் அழகான படமே ஆனந்தம்.
- Prem ❤